Tamilnadu Rain/​மீண்டும் கொட்டும் மழை.. 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு லீவு.. உங்கள் மாவட்டத்துக்கு லீவா.?

By Asianet TamilFirst Published Nov 18, 2021, 9:20 AM IST
Highlights

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் நேற்று முதல் கனமழை பெய்து வரும் நிலையில் 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமாக பெய்த கன மழையால் சென்னை மாநகரமே வெள்ளக் காடானது. தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், கே.கே. நகர், கொளத்தூர், வேளச்சேரி, அம்பத்தூர் மற்றும் தென்சென்னையின் புறநகர்ப் பகுதிகள், வடசென்னையின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. வட தமிழகம், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என எல்லா பகுதிகளும் மழை வெளுத்து வாங்கியது. 

தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் கன்னியாகுமரி கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. நெல்லையிலும் வெள்ளம் சூழந்தது. இந்நிலையில் தமிழகம் மற்றும் சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாத நிலையில், தேங்கிய வெள்ள நீர் பெரும்பாலான பகுதிகளில் வடிந்ததுது. இதற்கிடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதலே கன மழை பெய்துவருகிறது. இன்றும் அதி கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனால், மீண்டும் சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதற்கிடையே அதி கனமழை எச்சரிக்கை காரணமாக 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல், தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, கடலூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறை அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். இதேபோல புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
 

click me!