
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நடைபெற்ற 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு தற்போது முதலிடம் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடனாளிகளாக்கி விட்டதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் கடனை அடைப்பதற்காக மக்கள் மீது கூடுதல் வரிகள் சுமத்தப்படும் என்றும், நிதி மேலாண்மைக் குழு அமைத்த பிறகும் கடன் சுமை குறைந்தபாடில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திமுகவின் தற்போதைய நிலையை விமர்சித்த அவர், திமுக என்பது என்ஜின் இல்லாத கார் போன்றது என்றும், அதனை ஒரு கூட்டணி என்ற லாரி தான் கடந்த 10 ஆண்டுகளாக இழுத்துச் செல்வதாகவும் கிண்டல் செய்தார். கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்க ஆரம்பித்துவிட்டன என்றும் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
திமுகவின் கூட்டணி என்ற லாரி மக்கர் பண்ணி ஆரம்பித்துவிட்டது என்றும் திமுக கூட்டணியில் தற்போது புகைச்சல் கிளம்பிவிட்டது என்றும் தெரிவித்தார்.
கடந்த 56 மாத கால திமுக ஆட்சியில் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும், அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே 100 நாள் வேலைத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதிமுகவை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, எதிரிகளை வீழ்த்தும் பலமான கட்சி அதிமுக தான் என்று உறுதிபடக் கூறினார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது அது நல்ல கட்சியாகத் தெரிந்ததாகவும், தற்போது அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் அதனை மதவாதக் கட்சி என்று விமர்சிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எதிர்வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்றும் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.