மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டமும் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றா? உண்மை என்ன?

Published : Dec 10, 2024, 03:51 PM IST
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டமும் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றா? உண்மை என்ன?

சுருக்கம்

தமிழ்நாடு அரசு கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கலைஞர் கைவினைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள 35 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கடன் மற்றும் பயிற்சி உதவிகளை வழங்குகிறது. இது மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திலிருந்து வேறுபட்டது.

சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கலைஞர் கைவினைத்திட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.  

இந்த திட்டம் குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்குவதற்கும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும். கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின்கீழ் மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள். மீன் வலை தயாரித்தல், தையல் வேலை. நகைசெய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை. துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல்,  துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள். மூங்கில், சணல், பனை ஓலை. பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள். சுதை வேலைப்பாடுகள். பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும். ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்களை மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்குப் பரிந்துரைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்று என அண்ணாமலை தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பக்கத்தில்:  பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்தாமல், குழப்பம் ஏற்படுத்தியதால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல், விஸ்வகர்மா திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி, பெயரை மாற்றி வெளியிட்டுள்ளது திமுக. திமுக அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம், திமுக தொண்டர்களுக்குப் பயனளிப்பதற்காக மட்டுமே, சில தகுதித் தளர்வுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்காக விண்ணப்பித்த, தமிழக மக்கள் 8.4 லட்சம் பேருக்குத் துரோகம் இழைத்துவிட்டு, இந்த உருமாற்றப்பட்ட திட்டத்தின் மூலம், திமுக தொண்டர்களுக்கு, ரூ. 3 லட்சம் வரை பிணையில்லாக் கடன்களை வழங்கி, உண்மையான பயனாளிகளுக்குப் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியங்களின்  நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்திருக்கிறது இந்த திமுக அரசு. மக்களுக்குப் பயனளிக்காத அரசியல் அர்த்தமற்றது என்பதைத் மு.க. ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றா? உண்மை கண்டறியும் குழு (TN Fact Check) விளக்கமளித்துள்ளது.  அதில், விஸ்வகர்மா திட்டத்தில் இணைய உள்ள விதிகளில்  “குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய தொழில் செய்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதே வேளையில் விண்ணப்பிக்கும் முன்பே அத்தொழிலில்  ஈடுபட்டிருக்க வேண்டும்” என்று உள்ளது. மேலும், அடிப்படை பயிற்சியும், உயர்நிலை பயிற்சியும் வழங்குதல், அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குதல், கடன் உதவிகளை வழங்குதல் ஆகியவையே இத்திட்டத்தின் செயல்பாடுகள். 

இது, தங்கள் குடும்பத் தொழிலில் 18 வயதிருக்கு முன்பே ஈடுபடத் தூண்டும் வகையில் உள்ளது, இது மாணவர்களை உயர்கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைத்து குலத் தொழிலில் தள்ளும் என்பதால் இதில் தமிழ்நாடு அரசு இணையவில்லை. குலத்தொழில் ஊக்குவிப்பாக இல்லாமல், மாணவர்கள் உயர்கல்வி கனவைச் சிதைக்காமல் அதே நேரத்தில் இவ்வகை தொழில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என 'கலைஞர் கைவினைத் திட்டம்' முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. 

இதில் இணைவதற்கான வயது குறைந்தபட்ச வரம்பு  35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப / வகுப்பு  அடிப்படையில் அல்லாமல் 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் , வகுப்பு  அடிப்படையில்  எனச் சுருங்காமல், தொழில் ஈடுபடுவோருக்கு மட்டும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு அரசு சார்பாக வந்த விளம்பரத்தில் விண்ணப்பிக்கத் தகுதி என்பதில் 35 வயது நிரம்பியவர்களுக்கு என்றும் , எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே மழை எச்சரிக்கை! வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!