Pongal gift complaint:தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள்… உதவி தர ஆய்வாளர்கள் டிஸ்மிஸ்... அரசு அதிரடி நடவடிக்கை!!

By Narendran SFirst Published Jan 18, 2022, 4:53 PM IST
Highlights

திருப்பத்தூரில் தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதாக  சம்பந்தப்பட்ட உதவி தர ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதோடு  தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

திருப்பத்தூரில் தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதாக  சம்பந்தப்பட்ட உதவி தர ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதோடு  தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், சீரகம், மிளகு, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் கடந்த 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை முடிவடைந்தாலும், இம்மாதம் 31 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் வெடித்து வருகிறது.  அரசு கொடுத்த பொருட்களில் அரிசி மற்றும் ரவைகளில் வண்டுகள் இருப்பதாவும், சில இடங்களில் பொருட்கள் தரமில்லாமல் வருவதாக தொடர் புகார்கள் வருகின்றன. முக்கியமாக வெல்லம் உருகி பேஸ்ட் மாதிரியாக ஆகி விடுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. திருவண்ணாமலையில் 2.5 டன் வெல்லத்தை பயன்படுத்த உகந்ததல்ல என ஆட்சியர் நிறுத்தி வைத்தார். அதேபோல், புளி பாக்கெட்டில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவமும் அதனைத் தொடர்ந்த வழக்கும் மரணமும் இன்னமும் சர்ச்சையாகவே உள்ளது. பல்வேறு நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பை எடுத்து செல்ல பைகள் வழங்கப்படவில்லை.

பொங்கல் தொகுப்புக்காக வட மாநிலங்களில் இருந்து தரமற்ற பொருட்களை வாங்கி விநியோகம் செய்வதாகவும், பாக்கெட்டுகளில் ஹிந்தி மற்றும் மற்ற மாநில மொழிகளில் அச்சிடப்பட்ட சர்ச்சையும் என்று பொங்கல் தொகுப்பு பிரச்சனைகளின் தொகுப்பாகவே உள்ளது. அதிக கமிஷன் கிடைப்பதால் வட  மாநிலங்களில் இருந்து பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்கியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட 100 கிராம் மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையும், அவரைக் கொட்டையையும், வெண்டைக்காய் விதையையும் சேர்த்து மிளகு என்று பாக்கெட் செய்து கொடுத்துள்ளனர். அதேபோல் மிளகாய்த்தூள், தனியாதூள் பாக்கெட்டுகளில் மரத்தூளை கலப்படம் செய்துள்ளனர்.

இதுக்குறித்து சமூக ஊடகங்களில் புகார்கள் வெளியாகின. இது குறித்த தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதை அடுத்து அந்த புகார் குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட உதவி தர ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த கடையில் இருந்த தரமற்ற பொருட்கள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு புதிய தரமான பொருட்கள் வழங்கப்பட்டன. தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கண்காணித்து, உரிய நடவடிக்கைளை உடனுக்குடன் எடுக்கவும் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!