
முழு ஊரடங்கின் போது உணவு விடுதிகள், சிற்றுண்டிகள் தனது சொந்த வாகனத்தில் உணவுகளை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா 2 ஆம் அலைக்குப் பின்னர் நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்தே வந்தது. ஆனால், ஒமைக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே மாற்றிப் போட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கிட்டதட்ட அதேநிலை தான். பல மாதங்களுக்குப் பின்னர், வைரஸ் பாதிப்பு மீண்டும் மேல் நோக்கிச் செல்ல தொடங்கியுள்ளது. டிசம்பர் மாதம் 3வது வாரம் முதலே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே தமிழக அரசு எடுக்கத் தொடங்கிவிட்டது.
அதேபோல வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது. வைரஸ் பாதிப்பு கட்டுகடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. பேருந்துகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றில் 50% பார்வையாளர்கள் உடன் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கின் போது காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், முழு ஊரடங்கின் போது உணவு விடுதிகள், சிற்றுண்டிகள் தனது சொந்த வாகனத்தில் உணவுகளை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிப்பில், தமிழகத்தில் நாளை ( 9-1-2022 ) அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது , உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி. தங்களுடைய சொந்த விநியோக முறையில் ( Own Delivery ) மூலமாகவும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதியளிக்கப்படும். இவ்வாறு வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறை ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.