
சிவகங்கை
தமிழக அரசு விளையாட்டுக்கான பயிற்சியாளர்களை நியமிக்கவில்லை. தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் பதவி நிரப்பட வில்லை என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலில் 14 வயதுக்கு உட்பட்டோர் மாநில அளவிலான மினி கைப்பந்துப் போட்டிகள் நேற்றுத் தொடங்கின.
தமிழ்நாடு கைப்பந்துக்கழகம், சிவகங்கை மாவட்ட கைப்பந்துக்கழகம் மற்றும் புதுவயல் நண்பர்கள் கைப்பந்துக் கழகம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் போட்டிகளைத் கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார்.
இதன் துவக்க விழாவில் சிவகங்கை மாவட்ட கைப்பந்துக்கழக தலைவர் எஸ்பி. வரதராஜன் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் கேஆர். பெரியகருப்பன், மு.தென்னவன், தமிழ்நாடு கைப்பந்துக்கழக துணைத்தலைவர் எம்.பி. செல்வகணேஷ், வித்யாகிரி கல்விக்குழும பொருளாளர் முகமதுமீரா, சாக்கோட்டை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சுப. முத்துராமலிங்கம், முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிவகங்கை மாவட்ட கைப்பந்துக்கழக செயலாளர் கே. ஜெயக்குமார் வரவேற்றார்.
இந்த விழாவில் கனிமொழி எம்.பி பேசியது:
"இக்குழு விளையாட்டு உடற்பயிற்சி மட்டுமல்ல. குழு ஒற்றுமை, வித்தியாசம் பாராதது என விளையாட்டில் பங்கேற்பதாகும்.
முதலில் மாவட்ட அளவு குழு என்ற உணர்வும், பின்னர் இதிலிருந்து மாநிலங்களுக்கிடையே போட்டிக்காக பங்கேற்கும்போது தமிழ்நாடு என்ற உணர்வும், சர்வதேச அளவில் விளையாடும்போது குழுவில் இந்தியர் என்கிற உணர்வும் இருக்கவேண்டும்.
இன்றைய இளைஞர்கள் பிரச்சனைகள், சவால்களை சந்திக்கின்ற காலகட்டத்தில் இருக்கிறார்கள். இணையதளம், சமூக ஊடகங்களில் பல எதிர்மறையான தகவல்களை தவிர்த்து இதுபோன்ற விளையாட்டுக்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்று வளர்ச்சி காண வேண்டும்.
பெண்கள் பள்ளி அளவிலேயே விளையாட்டை நிறுத்திவிடாமல் கல்லூரி வரையிலும் விளையாட முன்வர வேண்டும்.
இங்கு பார்வையாளர் பகுதி அமைக்கவேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்குரிய திட்டத்தை என்னிடம் தந்தால் நிச்சயமாக நிறைவேற்றித் தருகிறேன்.
தமிழக அரசு விளையாட்டுக்கான பயிற்சியாளர்களை நியமிக்கவில்லை. தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் பதவி நிரப்பட வில்லை.
இளைஞர்களை நெறிப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் விளையாட்டு உதவியாக இருக்கும். தமிழக அரசு இதனை உணர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டுக்கான உதவித் தொகையை தர வேண்டும்.
அத்துடன் விளையாட்டுக்குத் தேவையான எந்த உதவியையும் செய்து கொடுக்கும்போதுதான் இந்திய மாணவர்களை வெற்றி வீரர்களாக நாம் பார்க்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் போட்டிகளில் சென்னை, திருவள்ளூர், திருச்சி, திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, பெரம்பலூர், ஈரோடு, திரூப்பூர், சேலம், சிவகங்கை, கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, நாகப்பட் டிணம், தஞ்சாவூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களிலிருந்து ஆண், பெண் இருபாலர் அணிகள் பங்கேற்கின்றன.
விழாவின் முடிவில் நண்பர்கள் கைப்பந்துக்கழக தலைவர் சுப. பாலுமகேந்திரா நன்றித் தெரிவித்தார்.