
மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முனைப்பு காட்டி வரும் நிலையில், தமிழகத்திலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்திட வேண்டும் என தமிழக அரசு தீர்க்கமாக இருந்தது. அதற்கான முன்னேற்பாடாக 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, திருப்புதல் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சூழலில் தான் ஜனவரி மாதம் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்த ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது. தற்போது ஒமைக்ரான் பரவலும் குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே அவர் உறுதியாக நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தெரிவித்தார். 10, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை இன்று வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வி துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.