
மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59.
விருதநகர் மாவட்டம் , ஆலங்குளத்தை அடுத்துள்ள மேலாண் மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் என அறியப்பட்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி.
மேலாண் மறைநாட்டில் விவசாயப் பணிகளை பார்த்துக் கொண்டிருந்த மேலாண்மை பொன்னுசாமி 1972 ஆம் ஆண்டு 'செம்மலர்' இதழில் பரிசு என்ற சிறுகதையை முதலில் எழுதினார். இதைத் தொடர்ந்து அவர் 24 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், 5 குறுநாவல்கள், ஒரு கட்டுரை தொகுப்பு போன்றவற்றை எழுதியுள்ளார்.
லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது, அமுதன் அடிகளார் விருது, வடஅமெரிக்க தமிழ்சங்க பேரவை விருது, 5 முறை ஸ்டேட் பாங்க் விருது, 8 முறை இலக்கிய சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மேலாண்மை பொன்னுசாமி இதுவரை பெற்றுள்ளார்.
இவர் எழுதிய 'மின்சார பூ' என்ற சிறுகதை தொகுப்பிற்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற இயக்கங்களில் முழு ஈடுபாடு கொண்ட செயல்பட்ட மேலாண்மை பொன்னுசாமிஇ பல்வேறு விவசாய சங்கங்களின் போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிக்ச்சை பெற்று வந்த மேலாண்மை பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.