உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.. மாஸ் காட்டிய தமிழக அரசு.

By Ezhilarasan BabuFirst Published Oct 11, 2022, 4:37 PM IST
Highlights

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிகளுக்கான விண்ணப்பிக்க கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். 

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்காக விண்ணப்பிக்க கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்ர்களே முழு வேலைவாய்ப்பை பெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசால் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுவது போல, பல்வேறு மாநிலத்தவரால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளும் பறிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் துறைகளில் மட்டுமல்லாமல் பெரும்பாலான கூலி வேலைகளில் வெளிமாநிலத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் தமிழர்கள் அகதிகளாக்கபடுவார்கள் என்ற அபய குரல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்ற பழமொழிக்கு ஏற்ப வந்தவர்களை எல்லாம் வாழ வைத்துவிட்டு தமிழர்கள் வேலை வாய்ப்பின்றி நிற்கும் அவல நிலை தொடர்கிறது. இதுவரை தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர்.  மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே,  BHEL, NLC, துறைமுகங்கள்,  விமான நிலையங்கள், பெட்ரோலிய தொழிலகங்கள் போன்றவற்றில் வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவு சேர்க்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாநில அரசும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்குவோம் என கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் அதை முழுமையாக நிறைவேற்றி இல்லை, மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் அதிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில், மாநில அரசின் வேலைவாய்ப்புகளிலேயேகூட அதிக அளவில் வெளிமாநிலத்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இதில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்: வடகிழக்கு பருவமழை எதிரொலி.. ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு !

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் 100% தமிழருக்கு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தமிழக அரசு முதல் முறையாக தமிழக அரசின் வேலைஐவாய்ப்புகள் 100 சதவீதம் தமிழர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்நிலையில்தான் தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு நிச்சயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பதற்கு தகுதியானவர்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 1021  உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் அப்பணிகள் முழுவதும் தமிழர்களுக்கு கிடைக்கும் வகையிலும், அதேபோல் வெளிமாநிலத்தவர்களை  தவிர்க்கும் வகையிலும் இந்த புதிய விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:   மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தீக்குளிப்பு

எனவே இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அப்பணிகளுக்கு வரும் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்  நவம்பர் மாதத்தில்  தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

click me!