
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்போது பள்ளியில் அரையாண்டு தேர்வு காலை, மாலை என இரண்டு ஷிப்டுகளில் நடந்து வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு மாணவன் மோகித் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வுக்கு முன்னதாக அவர் பள்ளியின் வளாகத்தில் உள்ள கைப்பிடி சுவர் அருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சுவரின் இடிபாடிகளுக்குள் மாணவர் மோகித் சிக்கிக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவரை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவன் மோகித் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம் தமிழகம் முழுவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியானதற்கு தமிழக அரசே காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் ராமதாஸ், தவெக ஆகிய கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ''சம்பந்தப்பட்ட பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்திருப்பதால் அதை புதிதாகக் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் எந்த அக்கறையும் காட்டாததன் விளைவு தான் ஓர் அப்பாவி மாணவரின் உயிர் அநியாயமான பறிபோயிருக்கிறதாக அன்புமணி உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
10% பள்ளிகள் கூட சீரமைப்பு இல்லை
தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளின் கட்டிடங்களும், சுற்றுச்சுவர்களும் இந்த நிலையில் தான் உள்ளன. பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்களை புதிதாகக் கட்டித் தருவதாக பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம் ஒன்றை திமுக அரசு கொண்டு வந்தது. ஆனால், பலவீனமான நிலையில் உள்ள பள்ளிகளில் 10% பள்ளிகளில் கூட அந்தத் திட்டத்தின்படி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்பதும் தெரியவில்லை என்று அன்புமணி தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.