
மீண்டும் பரவும் கொரோனா முகக்கவசம் அணியுங்கள் : கொரோனா பாதிப்பால் கடந்த 2019 ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழகம் மட்டுமல்ல உலகமே முடங்கி கிடந்தது. கொத்து கொத்தாக மக்கள் உயிர் இழந்தனர். கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பல கோடி மக்கள் உணவு இல்லாமல் தவித்தனர். தற்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா அச்சம் தலை தூக்கியுள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் பரவி வந்த கொரோனா பரவில் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்திய அளவில் 1,000க்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதுவரை 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்திலும் 65 வயது முதியவர் ஒருவரும், கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். இந்த உயிரிழப்பு மக்களை அச்சம் அடையவைத்துள்ள நிலையில், முதியவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல இணை நோய்கள் இருந்ததாகவும், கொரோனா வைரஸ் காரணமாக அவர் உயிரழக்கவில்லை. என பொது சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சமீபத்திய அறிக்கைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் COVID-19 பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் குறிப்பிடத்தக்க கொரோனா அதிகரிப்பு காணப்பட்டது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள், நகர சுகாதார அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள், நோய் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், இன்ஃப்ளூயன்ஸா போன்ற கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் பாதிப்புகள் முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அறிவுறுத்தப்படுவதாக கூறியுள்ளது.