உயர்கல்வி வளர்ச்சியில் இந்திய அளவில் தமிழகம் தான் முன்னிலை - சொன்னவர் அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர்...

First Published Nov 13, 2017, 9:08 AM IST
Highlights
Tamil Nadu is the highest level in the development of higher education - said Alappa University Vice Chancellor ...


சிவகங்கை

உயர்கல்வி வளர்ச்சியில் இந்திய அளவில் தமிழகம் 43.6 சதவீதம் பெற்று முன்னிலையில் உள்ளது என்று அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் கல்வியியல் கல்லூரி மற்றும் கல்வியியல் துறை சார்பில் தேசிய கல்வி தின விழா நடைப்பெற்றது.

இந்த விழாவுக்கு அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது:

"தரமான மற்றும் ஒழுக்கத்தைக் கற்பிக்கக் கூடிய கல்வியினால் மட்டுமே ஒரு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க முடியும். வாழ்க்கையில் தனிமனிதன், தான் எதிர்கொள்ளக்கூடிய அனைத்துச் சவால்களையும் சமாளிக்கின்ற ஆற்றலை தருவதே உண்மையான கல்வியாகும்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலான அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக கொண்டாடி நாட்டில் கல்வி அமைப்புகளை வளப்படுத்துவதே விழாவின் நோக்கம்.

உலகின் உயர்கல்வி வளர்ச்சியில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அதிலும், இந்திய அளவில் உயர்கல்வி வழங்குவதில் 43.6 சதவீதம் பெற்று தமிழகம் முன்னிலையில் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில், அழகப்பா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பெ.கன்னியப்பன் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது. "இன்றைய மத்திய, மாநில அரசுகள் திறன்சார் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. திறன் மேம்பாட்டுக் கல்வி அளிப்பதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரமுடியும்" என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் கல்விபுலம் முதன்மையர் பி.சிவக்குமார் வாழ்த்திப் பேசினார். போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏ.பாலு வரவேற்றார். கல்வியியல் துறைத்தலைவர் ஜி.கலையரசன் நன்றித் தெரிவித்தார்.

 

click me!