தமிழகம் முழுவதும் முக்கிய கட்சியை பிரமுகர்களை வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), டெல்லியில் உள்ள வருவாய்த் துறை ஆகியவை சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதைத் தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படைகள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வாகன சோதனை உள்ளிட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
50 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் முதுகிலே குத்திய திமுக, காங்கிரஸ்: பாஜக கண்டனம்!
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய கட்சியை பிரமுகர்களை வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஒரே நாளில் நடந்த சோதனையில் முக்கிய கட்சி பிரமுகர்கள் அவரது உறவினர்கள் வீடுகள் நிறுவனங்களில் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றும் சேலம் முக்கிய கட்சியின் நகர செயலாளர் வீடு உட்பட பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் வாக்காளர்களுக்குபணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக ஒவ்வொரு தேர்தலின்போதும் தேசிய அளவில் புகார் எழுந்து வருகிறது. எனவே இம்முறை தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை முன்கூட்டியே தீவிரமாக மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, பணப் பறிமாற்றத்தை கண்காணிக்கும் வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.