
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச கணினி வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. அதன்படி முதல்கட்டமாக 20லட்சம் மடிக்கணினிகள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 2011ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்காக "விலையில்லா மடிக்கணினி திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நவீன டிஜிட்டல் யுகத்தில் கல்வியும் இணையவழித் தளத்தில் நடைபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதியளவில் ஏற்பட்டது பிரச்சனைகளால், திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்ததால், மாணவர்கள் தேவையான மடிக்கணினிகளை பெற முடியாமல் இருந்தனர்.
2021ல் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு, இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் மடிக்கணினிகளின் தேவையை வலியுறுத்தி, தற்போது திமுக அரசு மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தமிழ்நாடு அரசு புதிய மடிக்கணினிகள் வாங்க டெண்டர் கோரியுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அல்லது டேப்கள் வழங்கப்படுகின்றன திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ₹2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மடிக்கணினியும் ₹20,000 மதிப்பில் தரமான அம்சங்களுடன் இருக்கும். இதில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 14 அல்லது 15.6 இன்ச் திரை, ப்ளூடூத் வசதி போன்றவை இடம்பெறும்.
சமீபத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திட்டம் குறித்து உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முந்தைய திட்டத்தின் செயல்திறன், மென்பொருள், பேட்டரி தரம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினிகள் வழங்க, விநியோக திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அரசு டெண்டர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.