
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பலமடங்கு உயர்ந்துள்ளது. எனவே நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
i. 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
ii. 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
iii. 1201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
iv. 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்படவுள்ளது.
v. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.
அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி,
1,சென்னையின் பிரதான நகரப் பகுதியில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், சென்னையோடு 2011ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25 சதவீதம் உயர்த்திடவும் வசூலிக்கப்படும்.
2,சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் உள்ள 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 75 சதவீதம், 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 100 சதவீதம், 1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தவும்,
3, சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 50 சதவீதம், 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 75 சதவீதம், 1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தவும்,
4, சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு 100 சதவீதமும்,
5, சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதம், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம், சொத்து வரியினை உயர்த்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போதைய சொத்துவரி சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டடங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் 62. 40 சதவீதமும் ஆகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகள், மாநிலத்தின் பிற 20 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 88 சதவீதமும் அமைந்துள்ளது. ஆகவே, பெரும்பாலான மக்கள் 1200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பாதல் இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வு செய்யப்படுகிறது.
தற்போது சொத்து வரி சீராய்வு, 2022-2023-ஆம் ஆண்டிற்கான முதலாம் அரையாண்டு முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.
நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.