
பயிர்க்கடன், வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட விவசாயிகளும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் இன்று மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு தெரிவித்து வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து தொழிற்சங்கங்களும், வணிகர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் இன்று போராட்டம் நடந்து வருகிறது.
உடுமலை:-
உடுமலையில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காய்கறி கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோ எதுவும் இயங்கவில்லை. இதனால், காலை வேளையில் வேலைக்கு செல்வோர் சற்று சிரமம் அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை: -
புதுக்கோட்டையில் பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் பஸ்கள் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. குறைந்தளவு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதையொட்டி மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
சேலம்: -
சேலத்தில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: -
காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோயில் நகரமான காஞ்சிபுரத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கோயில்களுக்கு இன்று வருவார்கள். அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பெரும்பாலானோர் ஆட்டோவையே நம்பியுள்ளனர். ஆனால், இன்று போராட்டத்தில் நடந்து வருவதால், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
திருச்சி:-
திருச்சியில் பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
நெல்லை: -
திருநெல்வேலியில் பெரிய நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. சிறிய நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கரூர்: -
கரூரில் அரசு பஸ்கள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்குகின்றன. சினிமா தியேட்டரில் 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.