
ஈரோடு
தரமான தளவாட பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.), ஈரோடு மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு அமைப்பின் கிளை தலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். மாநிலத் துணை பொதுச்செயலாளர் வி.இளங்கோ பங்கேற்றுப் பேசினார்.
“பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
களப்பணிக்கு தேவையான தரமான தளவாட பொருட்களை வழங்க வேண்டும்.
மின்பாதை நீட்டிப்பு பணிகளில் களப்பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர் பி.ஜோதிமணி உள்பட மின்வாரிய ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பெருந்துறை கோட்டச் செயலாளர் பி.குமாரசாமி நன்றித் தெரிவித்தார்.