விருப்ப பாடத்தை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடங்கள் 600 மதிப்பெண்கள் என்ற புதிய நடைமுறையும், விருப்ப பாடத்தை தேர்வு செய்யாத மாணவர்களுக்கு வழக்கம் போல் ஐந்து பாடங்கள்; 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறையும் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு- கட்டாயம் தமிழ்
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முறையே 5 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, 500 மதிப்பெண்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தலா 100 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு , கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது.
தமிழ் அல்லாமல் பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே உயர்கல்விக்கு சென்று விடுகிறார்கள் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழ் மொழி தொடர்பாக எந்தவித பொது அறிவும் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும், தமிழ் தேர்வு எழுத வேண்டும் என்ற அடிப்படையில், அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
மொழியை அவமதிக்கும் செயல்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தமிழை தாய் மொழியாக இல்லாத மாணவர்கள், தங்கள் மொழி பாடத்தை படிக்க வேண்டும் என்று விரும்பியதால், பிறமொழியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள், அவர்களது மொழி பாடத்தை, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை தொடர்ந்து நான்காவது விருப்ப படமாக படிக்கலாம் என்றும், ஆனால் அதில் பெறக்கூடிய மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு கணக்கில் கொள்ளப்படாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து தங்களது மொழிக்கான தேர்வில் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது, அவமதிப்பதாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில், சிறுபான்மை சமுதாய அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில், விருப்ப பாடத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கி, தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது .
அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறார். அதில், நான்காவது விருப்ப படமாக இடம் பெறும் தமிழ் அல்லாத பிறமொழி பாடங்களுக்கு, 35 மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் என்றும், இந்த மதிப்பெண் இனி தேர்ச்சிக்குரிய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டில் (2024-2025) இருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்கள்
இதன் மூலம் தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை விருப்பப்படமாக தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஒட்டுமொத்தமாக 6 பாடங்கள் ; 600 மதிப்பெண்கள் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் 5 பாடங்கள் ; 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்