
தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் சாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமுதாயத்தை தலைகுனிய செய்கிறது
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவன் பிறந்த தமிழக மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது. உலகம் அறிவு மயம் ஆகிறது. ஆனால் அன்பு மயம் ஆவதை தடுக்கிறது. சில சம்பவங்கள் சமுதாயத்தை தலைகுனியச் செய்கிறது.
சாதி மட்டும் காரணம் அல்ல
சாதி வேற்றுமையாக வேற்றுமை இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது மாற்றப்பட்டது உயர்வு-தாழ்வு கற்பிக்கப்பட்டது மேல்-கீழ் என்ற விதைக்கப்பட்டது. ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படுகொலைகளுக்குச் சாதி மட்டுமே காரணமல்ல இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன.
சட்டம் கடமையை செய்யும்
எதன்பொருட்டு நடந்தாலும், கொலை கொலை தான். அதற்கான தண்டனைகள் மிக மிகக் கடுமையாகவே தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.யாரும் எவரும் எதன்பொருட்டும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக் கூடாது என்பதை காவல் துறைக்கு உத்தரவாகப் போட்டுள்ளோம். எனவே, சட்டம் அதன் கடமையைச் செய்கிறது.
விழிப்புணர்வு அவசியம்
அதே நேரத்தில், இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.
அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும் - சமத்துவ சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும் அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை! சீர்திருத்தப் பரப்புரையும் குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆணையம் அமைக்கப்படும்
இது குறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திரு. கே.என்.பாஷா அவர்கள் தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும்.
ஆணவ படுகொலையை தடுக்க சட்டம்
இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள் சட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் 6T60T அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்'' என்று தெரிவித்தார்.