சேதமடைந்த பயிர்களுக்கு எவ்வளவு இழப்பீடு? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..! விவசாயிகள் கவனத்துக்கு!

Published : Dec 02, 2025, 03:39 PM IST
Mk Stalin

சுருக்கம்

கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கால்நடைகள் உயிரிழப்புக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியது. டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் பயிரிட்டிருந்த நெய் வயல்கள் மழை நீரில் மூழ்கியதால் நெற்பயிர்கள் அழுகி விட்டன. இதேபோல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழை காரணமாக விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் வேதனையில் துடித்து வருகின்றனர்.

சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அக்டோபர், 2025 மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 ஹெக்டேர் வேளாண்பயிர்களுக்கும், 345 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.

ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு

இந்த நிலையில், மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''டிட்வா புயல் காரணமாக சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என 4 பேர் பலியாகியுள்ளனர். கனமழையால் தமிழகம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

பயிர் சேத கணக்கெடுப்பு

மழையால் சேதம் அடைந்த விளைநிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும். பாதிப்புக்குள்ளான பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு முழுமையாக நடத்தி முடித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். மழையால் 582 கால்நடைகளும் உயிரிழந்த நிலையில், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். 1601 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இவற்றுக்கும் இழப்பீடு வழங்கப்படும்'' என்றார்.

ஒரே நேரத்தில் அதி கனமழை

தொடர்ந்து பேசிய அமைச்சர், ''சென்னையில் ஒரே நேரத்தில் அதி கனமழை கொட்டியுள்ளது. மழைநீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். சென்னையில் சாலைகளில் முறிந்து விழுந்த 27 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்