
குடியாத்தம்,
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு பல இலட்சம் மதிப்புள்ள 37 டன் கிராணைட் கற்களை லாரிகள் மூலம் கடத்திய இருவர் கைது. கற்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பரதராமி வனத்துறை சோதனைச் சாவடியில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் சித்தூருக்கு செல்ல முயன்ற இரண்டு லாரிகளை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அதில் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் இருப்பது தெரிந்தது. மொத்தம் 37 டன் கிரானைட் கற்கள் இருந்தன. அவற்றைக் கொண்டுச் செல்வதற்கான ஆவணங்களை காண்பிக்கும்படி ஓட்டுநர்களிடம், வன அதிகாரிகள் கேட்டபோது, அவர்களிடம் ஆவணங்கள் ஏதுமின்றி கிரானைட் கற்களை ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி செல்வது தெரிந்தது.
இரண்டு ஓட்டுநர்களிடமும் விசாரித்ததில் அவர்கள் சித்தூரை அடுத்த யாதமரியைச் சேர்ந்த பாபு (37), சித்தூர் கிரீம்ஸ் பேட்டையை சேர்ந்த ஜான்பீட்டர் (31) என்ற தகவல் தெரிய வந்தது.
மேலும் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள டி.பி.பாளையத்தை அடுத்த ஆந்திர கிரானைட் மலையில் உரிய அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் பரதராமி வழியாக சித்தூருக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.
இதையடுத்து 37 டன் கிரானைட் கற்களை லாரிகளுடன் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஓட்டுநர்கள் பாபு, ஜான் பீட்டர் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டு லாரிகளையும், ஓட்டுநர்கள் பாபு, ஜான்பீட்டர் ஆகிய இரண்டு பேரையும் பரதராமி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கிராணட் கற்கள் யாருக்காக? எதுக்காக கடத்தப்பட்டது என்ற கோணங்களில் பரதராமி காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.