
அரக்கோணம்,
சாலையை சரிசெய்து தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரக்கோணம் நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பல மாதங்களாக நடைப்பெற்று வருகிறது. நகரில் உள்ள 36 வார்டு பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தொட்டிகள் அமைக்கும் பணியும், குழாய்கள் பதிக்கும் பணியும் நடக்கிறது.
வார்டு பகுதியைத் தொடர்ந்து நகரிலுள்ள நெடுஞ்சாலைகளிலும் இந்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.
சில இடங்களில் சாலைகள் கரடுமுரடாக காணப்படுகிறது. சாலையில் கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது சாலையிலுள்ள தூசி, புழுதிமண் சாலையோரம் உள்ள கடைக்குள் சென்று குப்பையாகி விடுகிறது. இதனால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
சில வியாபாரிகள் கடையின் முன்பாக பெரிய அளவில் பிளாஸ்டிக் திரைகளை மாட்டி வைத்து குப்பைகள் உள்ளே வராமல் தடுத்து வியாபாரம் செய்ய வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் செல்லும் பொதுமக்களும் இந்த தூசியினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் முகமூடி அணிந்து செல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். அதிகாரிகள் யாரும் சாலையை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அரக்கோணம் நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் அரக்கோணம் – திருத்தணி சாலையில் சுவால்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வேலூர் மாவட்ட தலைவர் கே.எம்.தேவராஜ் தலைமைத் தாங்கி தொடங்கி வைத்தார்.
சவுளி வியாபாரிகள் சங்க தலைவர் பி.இளங்கோ, நகை வியாபாரிகள் சங்க தலைவர் எம்.எஸ்.மான்மல், மளிகை வியாபாரிகள் சங்க செயலாளர் ஜி.டி.அசோகன், மர வியாபாரிகள் சங்க தலைவர் அந்தோணிசாமி, ஓட்டல்கள் சங்க தலைவர் வெல்லமண்டிமணி, செயலாளர் பார்த்திபன், பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலைகளை சரிசெய்து தராத நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் செய்தவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாசில்தார் குமரவேல், காவலாளர்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அதிகாரிகள், நாளை (1–ஆம் தேதி) சாலை போடும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தனர். அதற்கு நாளை சாலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் நாங்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று கூறினார்கள். அதன்பின்னர் சாலை மறியல் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியலில் நகர வணிகர் சங்கங்களின் அனைத்து தரப்பு நிர்வாகிகள், புகைப்பட கலைஞர்கள் சங்கம், பூ வியாபாரிகள் சங்கம், கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.