மழைநீரை சேமிக்காமல் தனியார் தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக திறந்துவிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை... 

First Published Mar 16, 2018, 10:27 AM IST
Highlights
take actions against public department officials who opened rain water to private factories without saving


திருநெல்வேலி

கிடைத்த மழை நீரை உரிய வகையில் சேமித்து வைக்காமல் திருநெல்வேலி, தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீரை முறைகேடாக திறந்துவிட்டு விற்பனை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. மேலும், சில மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. 

இந்த நிலையில் அணைகளில் இருந்து அதிகப்படியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கடந்த மாதம் சேர்வலாறு அணை வறண்டது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் 19.68 அடியில் இருந்து 32 அடி வரை உயர்ந்தது. ஆனால், அந்த தண்ணீர் ஒரே நாளில் திறந்து விடப்பட்டது. 

தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 1020 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிக அளவு செல்கிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்பட்டி சகதியுடன் கூடிய தண்ணீர் அளவான 19.68 அடிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது. கோடை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைக்க பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், அதிகாரிகள் தண்ணீரை திறந்துவிட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதிகாரிகளின் இந்தச் செயலை கண்டித்து நேற்று பல்வேறு அரசியல் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு தலைமையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன், மண்டல செயலாளர் அழகர்சாமி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், தமிழக தேசிய முன்னணி மாவட்ட தலைவர் இளஞ்செழியன் மற்றும் விவசாயிகள் நேற்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அங்கு நுழைவு வாசலில் நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் கடந்த பருவமழையின் போது 90 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பியது. ஆனால் இந்த தண்ணீர் அதிகளவு திறந்து விடப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக சேர்வலாறு அணையில் கடந்த ஜனவரி மாதம் 5–ஆம் தேதி 148 அடி தண்ணீர் இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 5–ஆம் தேதியில் நீர்மட்டம் வெறும் 19 அடியாக குறைந்து விட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 2–வது வாரத்தில் பிசான நெல் சாகுபடி அறுவடை தொடங்கிவிட்டது. அப்போதே குடிநீருக்காக பாபநாசம் அணையை மூடி தண்ணீரை இருப்பு வைக்குமாறு விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

ஆனால், அதிகாரிகள் திருநெல்வேலி, தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீரை முறைகேடாக திறந்துவிட்டு விற்பனை செய்துள்ளனர்.

கிடைத்த மழை நீரை உரிய வகையில் சேமித்து வைக்காமல் பாதுகாக்க தவறிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், பாசனம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் ஆகியவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

click me!