"அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுக்கமுடியல… தமிழகத்தில் இருந்து வௌியேறும் ‘சின்டெல் நிறுவனம் - கங்கைகொண்டான் மக்கள் ஏமாற்றம்

First Published May 9, 2017, 4:02 PM IST
Highlights
syntel IT company left from tamil nadu


தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, கோடிக்கணக்கில் லஞ்சம் கேட்டது போன்ற காரணங்களால்,  ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் மென்பொருள் நிறுவனம் தொடங்க இருந்த அமெரிக்க சின்டெல் நிறுவனம்  அங்கிருந்து வெளியேறுகிறது.

தமிழகத்தில் இருந்து முதலீடு செய்யாமல் வெளியேறும் 2-வது நிறுவனம் இதுவாகும். இதற்கு முன் ஸ்ரீபெரும்புதூரில் கார் தொழிற்சாலை தொடங்க இருந்த கியா நிறுவனம் அதிமுக அமைச்சர்கள் அதிகப்படியான லஞ்சம் கேட்டதால் தமிழகத்தில் முதலீடு செய்யாமல், ஆந்திரா சென்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சேர்ந்த சின்டெல் மென்பொருள் நிறுவனம், நெல்லை மாவட்டம்,கங்கை கொண்டானில் 2.5 லட்சம் சதுர அடியில் நிறுவனம் தொடங்கப் போவதாக கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி அறிவித்தது. இந்த நிறுவனத்தில் ஏறக்குறைய 2,500 ஊழியர்களை பணிக்கு அமர்த்தவும் திட்டமிட்டது. இதற்காக முதல்கட்டமாக 100 ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனம் வாங்க இருந்தது.

இந்த நிலத்துக்கான ஒப்புதலைப் பெற கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசிடம் சின்டெல் நிறுவனம் முயற்சி செய்தும் பயனில்லை. அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுக்காததால், 4 ஆண்டுகளாக இந்த நிறுவனத்துக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளது.

சின்டெல் நிறுவனம், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிறுவனம் தொடங்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தொடர்ந்து தாமதம் செய்து வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஐ.டி. அமைச்சகத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசி, ஒற்றைச் சாளர முறையில் சின்டெல் நிறுவனத்துக்கு அனுமதி கொடுங்கள் எனக் கூறியும் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இது குறித்து தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சின்டெல் நிறுவனம் வீட்டு வசதித்துறையிடம் முறைப்படி விண்ணப்பிக்கவில்லை. ஐ.டி. துறையின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை’’ எனத் தெரிவித்தார்.

அதேசமயம், சின்டெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ தமிழகத்தில் நிலவும் ஊழல் தொழில் செய்வதை கடினமாக்கியுள்ளது. எல்காட்நிறுவனம் ஒப்புதல் அளித்த பின் ஏன் வீட்டு வசதித்துறை அனுமதி வழங்க வேண்டும். மாநிலதத்தில் உள்ள அனைத்து தொழில் முதலீட்டுக்கும் அனுமதி அளிப்பது எல்காட் அந்த நிறுவனமே அனுமதி கொடுத்துவிட்டதே.

ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு கூறினாலும், ஒவ்வொரு அமைச்சகத்தையும் ‘விஷேசமாகப் பார்த்து’ அனுமதி பெற வேண்டியது இருக்கிறது’’ எனத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர் எஸ். குருமூர்த்தி கூறுகையில், “ தமிழகத்தில் ஊழல் அதிகரிப்பதால்தான் முதலீடுகள்வௌியேறுகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் குஜராத், ஆந்திரா, மஹாராஷ்டிராவுக்கு சென்றுவிட்டன. அமைச்சர்களும், அதிகாரிகளும் கேட்கும் லஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனக்கு தெரிந்த வகையில் இனி புதிதாக முதலீட்டாளர்கள் வந்து, தேவையான லஞ்சத்தை கொடுத்து நிறுவனம் தொடங்குவார்கள் என்பதை நம்பமுடியவில்லை’’ எனத் தெரிவித்தார்.

click me!