
மேலப்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஆடு அறுப்பு மனையை திறக்கக் கோரி மமக நிர்வாகிகள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்பு, ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் உஸ்மான் கான் தலைமையில் நகர ஜமால், நாமியா சன் காஜா, களக்காடு அன்சாரி மற்றும் மேலப்பாளையம், பேட்டை பகுதி நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள், அலுவலகத்தின் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்,
அந்த மனுவில், “பாளை, மேலப்பாளையம், நெல்லை மண்டலங்களில் பல இலட்ச ரூபாய் மதிப்பில் ஆடு அறுப்பு மனைகள் கட்டப்பட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு முழுவதுமாக பணிகள் முடிந்தது. மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த ஆடு அறுப்பு மனைகள் திறக்கப்படாமல் உள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் அரசின் நிதி இழப்பையோ, சுகாதார சீர்கேட்டையோ பற்றி கவலைப்படாமல் அந்த இடம் கட்டுப்பட்டுள்ள உரிமையாளருக்கு ஆதரவாக செயல்படுகிறது.
இதுதொடர்பாக பல முறை மாநகர ஆணையரிடம் மனுக்கள் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த ஆடு அறுப்பு மையம் திறக்கப்படாததால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளின் திறந்தவெளியில் ஆடுகள் வெட்டப்படுகிறது. இதனால், டெங்கு போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும், சுற்றுச் சூழல் மற்றும் சுகாதார கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு இந்த ஆடு அறுப்பு மனைகளை பொது ஏலத்திற்கு கொண்டு வந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார சீர் கேட்டில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.