
ஜல்லிக்கட்டு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, ஊடகங்களில் பேட்டி அளித்த மயிலாப்பூர் துணை ஆணையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, சென்னை வன்முறைச் சம்பவம் தொடர்பான விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். அப்போது அவர் பேசியது:-
சென்னையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் நடுக்குப்பம் உள்ளிட்ட மீனவர்கள் வாழும் பகுதிகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன. அந்தப் பகுதிகளை நாங்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டோம்.
இந்தப் பிரச்னை குறித்து சட்டப் பேரவையில் பேசி, நிவாரண உதவிகளைப் பெற்றுத் தருவோம் எனத் தெரிவித்தோம். எனவே, பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும்.
வன்முறைச் சம்பவங்கள் குறித்து, மயிலாப்பூர் துணை ஆணையாளர் ஊடகங்களில் சில செய்திகளை எடுத்து வைத்தார். மீன் சந்தையை அந்தப் பகுதியில் உள்ளவர்களே சேதப்படுத்தினர் என்றார். வன்முறைகள் தொடர்பாக சட்டப் பேரவையில் பேசிய முதல்வர், மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 23 ஆம் தேதியன்று கலைந்து போகச் சொன்னதாகத் தெரிவித்தார்.
ஆனால், மயிலாப்பூர் துணை ஆணையாளர் தனது பேட்டியில், 21 ஆம் தேதியன்றே கலைந்து போகச் சொன்னதாகக் கூறினார். மேலும், அவர் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் எண்ணம் போராட்டக்காரர்களுக்கு இருந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை எனவும் துணை ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
முதல்வர் சொன்ன கருத்துக்கும் , துணை ஆணையர் சொன்ன கருத்துக்கும் முரண்பாடு உள்ளதே. பணியில் இருக்கும் காவல் உடை அணிந்து டிவி விவாதங்களில் அவர் எப்படி பங்கேற்கலாம்.
முதல்வர் தெரிவித்த கருத்துகளுக்கு மாறாக எதிர்மறையான கருத்துகளைச் சொல்லியுள்ளார். அவர் அரசின் அனுமதியைப் பெற்றுள்ளாரா எனவே, எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெரினாவில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனடியாக நீக்கிட வேண்டும் என்றார். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஓபிஎஸ் : ஜல்லிக்கட்டை நடத்திக் கோரி நடைபெற்ற பிரச்னையில், ஊடகங்களில் சில அதிகாரிகள் பேசியதாக அரசுக்கு அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதுமில்லை. ஆனாலும், அதற்கான அறிக்கைகளைப் பெறப்படும்.
வன்முறைச் சம்பவங்களில் காவல் துறையினர் அத்துமீறியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, காவல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக என்ன பேட்டி அளித்தார் என்கிற விவகாரமும் அதனுடன் சேர்த்தே விசாரிக்கப்படும் என்றார்.