கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வழக்கு: உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு!

By Manikanda Prabu  |  First Published Feb 19, 2024, 2:36 PM IST

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வழக்கு விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது


சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என ஜனவரி 24ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டது.

Latest Videos

undefined

தமிழ்நாடு பட்ஜெட் 2024: அமைச்சர்கள், ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

இதனிடையே, கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதி கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எதாவது கோரிக்கை வைக்க வேண்டுமென்றால் தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது  முன் வைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரு சாரார் அதிருப்தி தெரிவித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நடந்து வரும் நிலையில், பேருந்து நிலையம் திறக்கப்பட்டதையடுத்து அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதாகவும், பேருந்து நிலையத்தில் அவசியம் குறித்தும் பலரும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

click me!