செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு ஜாமின் கோரியும், கைது நடவடிக்கைக்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல்.ஏ பொறுப்பில் உள்ளதால் அதிகாரமிக்க நபராக உள்ளார். எனவே வழக்கின் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
அதேசமயம், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும், வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது என செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. தொடர்ந்து அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்றைய தினத்துக்கு தள்ளி வைத்திருந்தது.
அதன்படி, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று வந்தபோது, உச்சநீதிமன்ற கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்ற அமலக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தது.
தொடர்ந்து, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தபோது, அமலக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளார். ஆனால் தற்போது அவர் வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கை தள்ளி வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்சம் நாளைய தினமாவது விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும், அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி ஜூலை 10ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை. அது முடிந்து செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.