
ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் தொடர்பாக கடந்த 3 நாட்களில் 69 கேவியட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக அவசரச்சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தநிலையில், பீட்டா போன்ற விலங்குகள் நலஅமைப்புகள் தடை ஏதும் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக, கடந்த சனிக்கிழமை கேவியட்மனுவை தமிழக அரசு தாக்கல் செய்து இருந்தது. அதன்பின், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தனித்தனியாக 68கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த, இளைஞர்கள், மாணவர்கள் கடந்த ஒருவாரமாக தன் எழுச்சியாக நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து அவசரச் சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், நிரந்தரச் சட்டம் தேவை என இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச்சட்டத்துக்கு பீட்டா போன்ற விலங்குகள் நல அமைப்புகள் தடை பெற்று விடக்கூடாது என்ற அச்சத்தில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தமிழக அரசு கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தது.
தமிழக அரசைத் தவிர்த்து, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 68 பேர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட்மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்த அமைப்பு மனு செய்தாலும் அது தொடர்பாக உச்சநீதிமன்றம் எந்தவிதமான உத்தரவு பிறப்பிக்கும் முன், இந்த 69 பேரின் கருத்துக்களை கேட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.