
கன்னியாகுமரி
சித்ரா பௌர்ணமியான நாளை ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதயமாகும் அற்புத காட்சியை உலகிலேயே கன்னியாகுமரியில் மட்டுமே காண முடியும்.
வருடந்தோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்தாண்டு சித்ரா பௌர்ணமி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.
இதனையொட்டி நாளை மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும்போது சந்திரன் உதயமாகும். இது கண்கவர் காட்சியாக இருக்கும்.
இந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டுமே காண முடியும்.
இந்த அபூர்வ காட்சியை காண ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது. அதனால், உலகிலேயே இந்த காட்சியை கன்னியாகுமரியில் மட்டுமே நாளை காண முடியும். இதனைக் காண சுற்றுலாப் பயணிகள் பல்லாயிரக்கணக்கில் கூடுவார்கள்.
மாலையில் சூரியன் மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் பல்வேறு நிறங்களுடன் பந்து போன்ற மஞ்சள் நிறத்துடன் மறையும். அந்த சமயத்தில் கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடலில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்துபோல எழும்பும்.
அப்போது கடலின் மேல்பகுதியில் உள்ள வானம் வெளிச்சத்தால் பளிச்சென்று மின்னும். இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து பார்க்கலாம்.
இது தவிர கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் பக்கம் உள்ள முருகன்குன்றத்தில் இருந்தும் அபூர்வ காட்சியை கண்டு ரசிக்கலாம்.
சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பலத்த காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.