கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தியது தமிழக அரசு - டன் ஒன்றுக்கு ரூ.2850 ஆக நிர்ணயம்

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 03:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தியது தமிழக அரசு - டன் ஒன்றுக்கு ரூ.2850 ஆக நிர்ணயம்

சுருக்கம்

கரும்புக்‍கு மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்‍குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட டன் ஒன்றுக்‍கு 2 ஆயிரத்து 850 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த விலையைக்‍ காட்டிலும் இது 550 ரூபாய் கூடுதலாகும். மேலும், கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகள் அளிக்‍க முத்தரப்பு குழு அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில்,  கரும்பு உற்பத்தியைப் பெருக்கவும், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அவர்களது வருமானம் அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகள் முழு அரவைத் திறனை அடைந்து அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.  

நிழல்வலை கூடத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்தல், பாசன நீர், உரம் ஆகியவைகளை திறனுடன் பயன்படுத்துதல், நுண்ணீர்ப் பாசனத்தின் மூலம் உரமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கி புதிய தொழில்நுட்பங்களை கொண்ட நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது- கடந்த 5 ஆண்டுகளிலும் உயர் அளவில் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயம் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

நடப்பு 2016-17 கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது-  அதாவது, கடந்த ஆண்டு நிர்ணயித்த அதே தொகையான 2 ஆயிரத்து 300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது- அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 600 ரூபாய் வழங்கி வருகின்றன- அதே போன்று மகாராஷ்டிராவில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 475 ரூபாய் வழங்கி வருகின்றன என்றும் முதலமைச்சர் சுட்டிக்‍காட்டியுள்ளார்.  

கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கடந்த ஆண்டு நிர்ணயித்ததைப் போலவே,  மாநில அரசு பரிந்துரை விலையாக, போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட, 2 ஆயிரத்து 850 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது-  இதன் மூலம் மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையான 2 ஆயிரத்து 300 ரூபாய் என்பதற்குப் பதில் தமிழக கரும்பு விவசாயிகள் டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 850 ரூபாய், அதாவது கூடுதலாக 550 ரூபாய், பெற வழி வகை ஏற்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தவும், சொட்டு நீர்ப்பாசன வசதிகளை கரும்பு விவசாயத்திற்கு அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேளாண்மைத் துறைக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ் கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் உரிய பங்கு பெறும் வகையிலும் கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்திடவும் தான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்க்கும், எனக்கும் வெறும் பங்காளி சண்டை தான்..! மீண்டும் அதிமுக கூட்டணியில் அமமுக.. டிடிவி பளீர்..
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்..!