கரும்பு ஆலை அருகில் சமையல் செய்து சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்…

First Published Jan 4, 2017, 10:53 AM IST
Highlights


சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நிலுவையில் உள்ள ரூ.25 கோடியைக் கேட்டு விவசாய சங்கத்தினர் ஆலையின் அருகில் சமையைல் செய்து சாப்பிட்டு காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவலம் அம்முண்டி அருகே உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ரூ.25 கோடி கரும்பு நிலுவைத் தொகையைக் கேட்டு விவசாய சங்கத்தினர் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

இதற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

கரும்பு விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் பழனிரெட்டி, கரும்பு உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் கண்ணையநாயுடு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேலு, மாவட்ட அமைப்பாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“கடந்த 2014–ம் ஆண்டு முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.25 கோடி நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்”,

“கரும்பு வெட்டு கூலியை ஆலை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்”

“கரும்பு ஆலைகளின் கடனை தமிழக அரசே ஏற்றிட வேண்டும்”,

“2016–17–ஆம் ஆண்டு அரவை பருவத்துக்கு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும்”,

“வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை 5000 டன் அரவை திறன் கொண்ட ஆலையாக மேம்படுத்த வேண்டும்”

“வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தியை உடனே தொடங்கிட வேண்டும்”

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கையில் கரும்புகளுடன் முழக்கமிட்டவாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதரன், “கரும்பு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்கும் வரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அதுவரை ஆலை முன்பு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தைத் தொடர போகிறோம்” என்றுத் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் அனைத்திந்திய கிசான் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் சங்க நிர்வாகிகள் எல்.சி.மணி, அமரேசன் உள்பட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், கரும்பு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கம், கரும்பு உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்கம் முதலிய சங்கங்களை சேர்ந்த வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கரும்பு விவசாயிகள் ஆலை அருகிலேயே சமையல் செய்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

click me!