
விருதுநகர்
காரியாபட்டியில் இரவு நேர ரோந்துப் பணீயில் இருக்கும் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர், வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும் கிராம மக்களிடம் சாதி பெயரை கேட்டு குறிப்பிட்ட சாதி என்று தெரிந்ததும் தரக்குறைவாக பேசுகிறார். பெண்களையும், சிறுவர்களையும் கூட விட்டு வைக்கவில்லை இந்த போலீஸ்.
விருதுநகரில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடம் தண்டியணேந்தல் கிராமத்தினர் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில், “காரியாபட்டி அருகே உள்ளது தண்டியணேந்தல் கிராமம். இந்த கிராமத்தில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
எங்கள் கிராம மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு அருகில் உள்ள கல்குறிச்சி கிராமத்திற்கோ அல்லது மல்லாங்கிணறு கிராமத்திற்கோ சென்று வர வேண்டும்.
வழக்கமாக வேலை நிமித்தம், வெளியே சென்று விட்டு இரவு நேரத்தில் கிராமத்திற்கு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் மல்லாங்கிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரணன் சுடுர்ப் பணிக்கு வரும்போது அந்த வழியாக செல்பவர்களை, “எந்த ஊர்” என்று கேட்பதுடன் “சாதியையும்” கேட்கிறார்.
குறிப்பிட்டச் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்னவுடன் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார். பல சந்தர்ப்பங்களில் தேவையில்லாமல் அவர்களை அடித்து துன்புறுத்துகிறார். குறிப்பிட்டச் சமுதாயத்தை சேர்ந்தவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகிறார். வெளியில் சென்றுவரும் பெண்களை மரியாதை குறைவாக பேசுவதுடன், தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களையும் வேட்டி கட்டிதான் வர வேண்டும் என்று தொந்தரவு செய்கிறார்.
இவரது இந்த நடவடிக்கையால் எங்கள் கிராமத்தில் சாதி மோதல் உருவாக வாய்ப்புள்ளது. மேலும் கிராமச் சாவடியில் யாரும் உட்கார முடியவில்லை. நேற்று முன்தினம் தோணுகால் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு சென்றுவிட்டு வந்த எங்கள் கிராமத்தினரை தரக்குறைவாக பேசியுள்ளார்.
தேவையின்றி எங்களைத் துன்புறுத்தும் மல்லாங்கிணறு உதவி ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் எங்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.