பன்னிரெண்டாம் வகுப்பு - பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத செல்லும்முன் தனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்த பின்னர் தேர்வெழுத சென்ற காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,903 பள்ளிகளில், 2,756 மையங்களில் 8 இலட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் பதினொன்றாம் வகுப்புக்கும் மார்ச் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வை 8 இலட்சத்து 61,913 பேர் எழுதுகிறார்கள். மார்ச் 16 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை 9 இலட்சத்து, 64,441 பேர் எழுதுகிறார்கள்
தருமபுரி மாவட்டம் இருமத்தூர் ஐவிஎல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதுவதை முன்னிட்டு,பள்ளியின் தாளாளர்,ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு பாத பூஜை செய்து அவர்களை வணங்கிவிட்டு,தேர்வு எழுத சென்றனர்.இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆனந்த கண்ணீருடன் தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.