வேலையை பார்க்காம என்ன பண்றீங்க...! காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் செம்ம டோஸ் விட்ட உயர்நீதிமன்றம்..!

First Published Mar 1, 2018, 2:08 PM IST
Highlights
high Court order to the Police and Tamil Nadu Government


போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் பேனர்களை அகற்றாமல் காவல்துறை என்ன செய்கிறது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையை பேனர்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு மட்டுமன்றி விபத்துகள் அடிக்கடி நடைபெற்ற வண்ணம் உள்ளது. 

ஏராளமான பேனர்கள் வாகன ஓட்டிகள் மீதும் பாதசாரிகள் மீதும் கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்துகிறது. 

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், விபத்து ஏற்படும் வகையில் உள்ள பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இதை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. 

அப்போது தலைமை நீதிபதி, போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடையூறாக உள்ள பேனர்களை அகற்றாமல் காவல்துறை என்ன செய்துக் கொண்டிருக்கிறது? பேனர்களை அகற்றாமல் இன்னும் ஏன் அனுமதி தரப்படுகிறது என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். 

கிரின்வேஸ் சாலை முதல் உயர் நீதிமன்றம் வரைதான் பேனர்கள் இல்லை என நீதிபதிகுறிப்பிட்டார். 

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி 5-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

click me!