
Erode student murder : பள்ளிகளில் மாணவர்களுக்கு படிக்க பாடம் மட்டும் இல்லாமல் ஒழுக்கம் கற்பித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு மது போதையில் மாணவர்கள் வருவதும், ஆசிரியர்களை கேலி செய்வதோடு இல்லாமல் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தலைமுடியை ரவுடி போல வெட்டியும் ஒழுக்க கேடான நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் மாணவன் ஒருவனை சக மாணவர்கள் சேர்ந்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சார்ந்த சிவா - சத்யா தம்பதியினரின் மகன் ஆதித்யா. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துளார், நேற்று முன் தினம் பள்ளிக்கு மாணவன் ஆதித்யாவை அவரது தந்தை சிவா பள்ளிக்கு அழைத்து சென்று விட்டுள்ளார்.
மாணவியிடம் பேசியதால் மோதல்
அன்றைய தினம் மாலை நேரத்தில் மாணவன் ஆதித்யாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளியின் ஆசிரியர்கள் ஆதித்யாவின் தந்தைக்கு போன் செய்துள்ளனர். இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது ஆதித்யா உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் குவிந்த மாணவன் ஆதித்யாவின் உறவினர்கள் காலையில் நல்ல முறையில் பள்ளிக்கு சென்ற மாணவன் எப்படி உயிர் இழந்தான் என தெரியவில்லை என்று ஆதங்கம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சக மாணவர்களுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர்கள் ஆதித்யாவைத் தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ஆதித்யா தனது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியுடன் பேசியதால், சில மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருந்தது. இதனிடையை சம்பவம் நடைபெற்ற தினத்தில் ஆதித்யா பள்ளிக்கு செல்லாமல் மது அருந்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அன்றைய தினம் மாலை பள்ளி முடிந்து வெளியே வரும் போது சக மாணவனிடம் அந்த பெண்ணிடம் ஏன் பேசுகிறாய் என வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. பள்ளி வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஆதித்யாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஆதித்யா கிழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார். அந்த மாணவனை மருத்துமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஆதித்யா உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தச் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதே பள்ளியைச் சேர்ந்த 17 வயது மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர்.