
அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நல ஆணைய அதிகாரிகள், அவரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாணவி அனிதா, மருத்துவ படிப்பில் சேர இயலாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் இந்த மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பான விசாரணையை, தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில், அனிதாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், குழுமூரில் உள்ள உயிரிழந்த மாணவி அனிதாவின் வீட்டுக்குச் சென்ற தேசிய ஆதிதிராவிட நல ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, எஸ்.பி. அபினவ் குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், அனிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்க தமிழக அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்றும், விசாரணை தொடர்பான அறிக்கை 15 நாட்களுக்குள் அளிக்கப்படும் என்றும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் கூறினார்.