
கடலூர்
அலுவலகத்தில் வேலை தரமால் சம்பளம் மட்டும் வாங்குவதால் மன உளைச்சல் அடைந்த ஓட்டுநர், தனது குடும்பத்துடன் நெல்லிக்குப்பம் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர் நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஓட்டுநரகா வேலை செய்து வருபவர் ரவி (51). இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு வெங்கடேஷ் என்ற மகனும், ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர்.
ரவிக்கு நெல்லிக்குப்பம் அலுவலகத்தில் எந்தவித வேலையும் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை. ஆனால், அவருக்கான ஊதியம் மட்டும் சரியாக மாதாமாதம் வழங்கப்பட்டு வருகிறது.
வேலை செய்யாமல், சம்பளம் மட்டும் வாங்குவது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ரவி அங்குள்ள அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டார். ஆனால், இதுகுறித்து உரிய தகவல் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று ரவி, தனது மனைவி, மகன், மகளுடன் நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர், அவர் குடும்பத்துடன் அலுவலகத்தின் முன்பு உட்கார்ந்து தனக்கு வேலை வழங்கக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிவேல்ராஜ், ரவியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இது குறித்து ரவி கூறியது:
“எனக்கு பதவி உயர்வு வேண்டும், மேலும், என்னை திருக்கோவிலூருக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று கூறினார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஓட்டுநர் ரவி இதற்கு முன்பு கள்ளக்குறிச்சியில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். அப்போது, அவர் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. இதனால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு, ரவி நெல்லிக்குப்பத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பணியில் சேர உத்தரவிடப்பட்டது. அதன்படி, பணியில் சேர்ந்த ரவி தனக்கு மன உளைச்சல் இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்து மனு கொடுத்திருந்தார்.
அதனால்தான் அவருக்கு ஓட்டுநர் பணி வழங்கவில்லை. மேலும், ரவிக்கு உரிய மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரை செய்துள்ளோம். அந்த பரிசோதனை முடிந்த பிறகு தான் அவருக்கு ஓட்டுநர் பணி வழங்கப்படும்” என்றுத் தெரிவித்தார்.