
கிருஷ்ணகிரி
செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாம்பழங்கள் விற்கும் வியாபாரிகளை காவலாளர்கள் எச்சரித்தார்.
தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பையூர் அருகே 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தற்காலிகக் கடைகளை அமைத்து மாம்பழங்களை விற்று வருகின்றனர்.
இந்தக் கடைகள் பயணிகள், வாகன ஓட்டிகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றதாம்.
இதனையடுத்து, வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இதில், தலைமை ஏற்ற காவல் ஆய்வாளர் ஆர்.சுப்பிரமணியன், "போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்திருந்தால் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 15 அடி தூரத்தில் கடைகளை அமைக்க வேண்டும்.
இயற்கைக்கு மாறாக செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்யக் கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.
இந்தக் கூட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் காயத்திரி, விஜயசங்கர், தேசிய நெடுஞ்சாலை அலுவலர்கள் பெரியதுரை, ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.