
விருதுநகர்
ரூ.3 இலட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 370 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை குண்டுகட்டாக தூக்கி காவலாளர்கள் வேனில் ஏற்றினர்.
“காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்,
குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்,
ரூ.3 இலட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மூன்றாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சுப்புக்காளை தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சிலர், நான்கு வழிச்சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அப்போது, காவலாளர்கள் அவர்களை தடுத்தனர். இருப்பினும், சிலர் நான்கு வழிச்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது, மறியல் பேராட்டத்தில் ஈடுபட்ட 298 பெண்கள் உள்பட 370 பேரை காவலாளர்கள் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
இந்தச் செயலால காவலாளர்களுக்கும், மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளும், வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால், ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.