
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் உள்ள பகுதியில் 25 வருடங்களுக்கும் மேலாக இருந்த காந்தி சிலையை மர்ம நபர்கள் யாரோ உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலாளர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் மத்திகிரி அருகே கலுகொண்டப்பள்ளி உள்ளது.
இந்தப் பகுதியில் காந்தி சிலை ஒன்று உள்ளது. சாலையில் இருந்து 100 அடி தொலைவில் உள்ள இந்த சிலை பீடத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு மேலாக அந்த பகுதியில் இந்த சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த சிலையை மர்ம நபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதில் காந்தி சிலையில் இரண்டு கால்கள் மற்றும் இடது கை பகுதி சேதமடைந்தது.
நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சிலை உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மத்திகிரி காவலாளர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். "குடிபோதையில் மர்ம நபர்கள் யாராவது காந்தி சிலையை உடைத்தனரா? அல்லது கலவரத்தை ஏற்படுத்த சிலை உடைக்கப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் மத்திகிரி காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.