
புதுக்கோட்டை
பொறுப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 8-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் நேற்று இச்சங்கத்தின் மாநில உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் நிறுவனர் இரா.போஸ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சு.சீனிவாசன், செயலர்கள் தி. பரமானந்தஜோதி, லதா,பொருளாளர் ராமநாதன், துணைத் தலைவர் ஷேக் தாவூத், வட்டத் தலைவர் பச்சையப்பன் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் :
"பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பது,
முதல்வர் அறிவித்த பிறகும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் மாவட்ட மாறுதலை வழங்க வேண்டும்.
ஒரு கிராம நிர்வாக அலுவலரே கூடுதல் பொறுப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்பு வகித்து வரும் நிலையில், பணிச் சுமையைக் கருதி உரிய பொறுப்பூதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன்பு டிசம்பர் 8-ஆம் தேதி போராட்டம் நடத்துவது,
இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகளை பங்கேற்க செய்வது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையர் எஸ்.செந்தில்குமார், வட்டச் செயலர் ஆரோக்கியராஜ், பொருளாளர் சி.ராஜேந்திரன், மாவட்டத் துணைச் செயலர் அ.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.