
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (அக். 26) காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “போட்டியில், தடகளம், நீச்சல், கூடைப்பந்து மற்றும் இறகுப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் வயது வரம்பின்றி இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது.
தடகளப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு 100 மீ, 600 மீ, 2,000 மீ ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போட்டிகளும்,
நீச்சல் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ, ப்ரீ ஸ்டைல் 50 மீ, பேக் ஸ்ட்ரோக் 50 மீ, பிரஸ்ட்
ஸ்ட்ரோக் 50 மீ, பட்டர் பிளை 200 மீ, இன்டிவிஜுவல் மிட்லே ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது.
குழுப் போட்டிகள் பிரிவில் இறகுப்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
எனவே, அனைத்து பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம்” என அவர் தெரிவித்தார்.