மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடம்  வசூலித்த அபராதம் எவ்வளவு தெரியுமா? ஸ்டேட் பேங்க்கின் கட்டண கொள்ளை அம்பலம்

First Published Aug 20, 2017, 12:18 PM IST
Highlights
state bank collected the moner as penalty due to not maintaining minimum balance


வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச  இருப்பு தொகை வைக்காத 3.88 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.235 கோடி அபராதமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

நடப்பு நிதியாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத காலத்தில் இந்த பணம் வசூலிக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மூலம் தெரிய வந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஏப்ரல் மாதம் முதல், பல புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தியது.

அதன்படி, பெரு நகரங்களில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக வைத்திருக்க வேண்டும்.

எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்ச தொகையில் 75 சதவீதம் பற்றாக்குறை இருந்தால் 100 ரூபாய் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும்.

50 சதவீதம் முதல் 75 சதவீத பற்றாக்குறை இருந்தால் 75 ரூபாயுடன் கூடுதல் வரி, 50 சதவீதத்துக்கு கீழ் பற்றாக்குறை இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரி செலுத்த வேண்டும். கிராமப்புற பகுதிகளில் குறைந்தபட்ச தொகை இல்லை எனில் ரூ.20 முதல் 50 வரை அபராதம் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும் என ஸ்டேட் வங்கி அறிவித்தது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரானசந்திரசேகர் காட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில் நடப்பு நிதியாண்டில், வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்கள் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை பின்பற்றாத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம்  எவ்வளவு வசூலிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து சந்திரசேகர் கூறுகையில், “ நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில், வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத 3.88 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.235 கோடியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவலை மும்பையைச் சேர்ந்த ஸ்டேட் வங்கியின் துணை மேலாளர் அந்தஸ்தில் இருக்கம் அதிகாரி அளித்துள்ளார்.

ஆனால், எந்த வகையான வங்கிக்கணக்குகளில் இருந்து இந்த அபராதம் வசூலிக்கப்பட்டது, எந்தெந்த வகைகளில் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து குறிப்பிடவில்லை.

சமானிய மக்கள் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளதால், அவர்களுக்கும் அபராதம் விதிப்பது நியாயமற்றது. அவர்களின் நலன்கருதி அபராதம் விதிக்கும் கொள்கையை ஸ்டேட் வங்கி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

click me!