
காவிரி தொழில் நுட்பக் குழுவின் தலைவராக பணியாற்றிய மோகன கிருஷ்ணன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 85.
மோகன கிருஷ்ணனின் மறைவு குறித்து திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருந்து தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அரும்பாடுபட்ட பொறியாளர் மோகனகிருஷ்ணன் அவர்களின் மறைவு செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவராக தமிழக அரசுக்கு அரிய அறிவுரைகளை வழங்கி, முதலமைச்சர்கள் அனைவருக்கும் உற்ற ஆலோசகராக விளங்கி, காவிரி நதிநீர் இறுதி தீர்ப்பு வெளிவருவதற்கு உற்ற துணையாக இருந்தவர் மோகனகிருஷ்ணன் .
தமிழக விவசாயிகளின் அனைத்து பிரச்னைகள் குறித்தும் முழு புள்ளிவிவரங்களை காவிரி நடுவர் மன்றத்திற்கும், அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்றபோதும் ஆதாரபூர்வமாக கொடுத்து உதவி, தமிழகத்திற்கு நீதி கிடைக்க பெரும் பங்காற்றிய அவரது மறைவு தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் பேரிழப்பாகும்.
இவ்வாறு கூறியுள்ளார்.