
மதுரையில் 'தமிழ்நாடு வளர்கிறது' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி மதிப்பில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தியாகியுள்ளன. முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் மதுரை கோயில் நகரமாக மட்டுமின்றி தொழில் நகராகவும் மாற வேண்டும் என்று தெரிவித்தார்.
மதுரை தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''திராவிட மாடல் அரசு அமைந்த உடன் தமிழகம் பொருளாதரத்தை முன்னேற்ற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தோம். அதன்பேரில் ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தை தொழில் முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றினோம். முதல்வர் கேட்டுக் கொண்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள். இங்கே தொழில் தொடங்க தகுந்த சூழ்நிலை, அரசின் தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே முதலீடு செய்வார்கள்.
தூங்கா நகர் என்று அழைக்கப்படும் மதுரையை எப்போதும் விழிப்புடன் இருக்கும் நகரம் என்று சொல்லலாம். மதுரையை கோயில் நகரம் என்று சொன்னால் மட்டும் போதுமா? மதுரையை தொழில் நகராகவும் மாற்ற என்பது தான் என்னுடைய ஆசை. மதுரை தொழில் கட்டமைப்புகளை கொண்ட வலிமையான நகரம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமாக மதுரை உள்ளது'' என்று தெரிவித்தார்.