
தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவகுமார், இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், மிஸ்கின், பிரேம் குமார், ஞானவேல், கிரிக்கெட் வீரர் நடராஜன், தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்விக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயன் பெறும் பயனாளிகள் மேடையேறி பெருமையுடன் பேசினார்கள்.
அப்போது பேசிய தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிரேமா என்ற மாணவி, ''நான் கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கி படித்தேன். எங்கள் வீடு மழை நேரங்களில் ஒழுகும். மழை பெய்யும்போதெல்லாம் எனது அம்மா, அப்பா ஒழுகும் வீட்டில் எப்படி இருக்கிறார்களோ என ஹாஸ்டலில் இருந்து நினைத்துக் கொண்டிருப்பேன். விரைவில் அம்மா, அப்பாவுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை'' என்று தெரிவித்தார். அந்த மாணவி கண்ணீர் மல்க பேசியதால் அரங்கமே உறைந்து போனது.
மாணவிக்கு புதிய வீடு
இந்த நிலையில், கண்ணீர் மல்க பேசிய மாணை பிரேமாவுக்கு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டிக்கொடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து புதிய வீட்டுக்கான ஆணையை அந்த மாணவியின் பெற்றோரிடம் தென்காசி மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பெருமையுடன் தெரிவித்தார்.
பிரேமாவுக்கு இனி வேண்டாம்
''ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்! எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்! உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.