
தமிழக அரசின் ஊழலால் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்திற்குச் செல்வதாக திமுக செயல்தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கியா வாகன தயாரிப்பு தொழிற்சாலை ஆந்திராவுக்குச் சென்ற விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜனிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படத்தில் வருவது போல பிராஜக்ட் வேல்யூ எவ்வளவோ அதில் பாதியை வெட்டு என்று தமிழக அரசியல்வாதிகள் அட்ராசிட்டி பண்ணியதே கியா நிறுவனம் தலைதெறிக்க ஓடியதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
இவ்விவகாரத்தில் தமிழக அரசை வகை தொகை இல்லாமல் குற்றஞ்சாட்டி உள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் ஊழலால் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன. தமிழக அரசு நிர்வாகத்தில் சீர்கேடு நிலவி வருகிறது. ஃபோர்டு நிறுவனம் தனது 2 வது பிரிவை ஐதராபாத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. இசுசு கார் நிறுவனம் சென்னைக்குப் பதிலாக ஆந்திரா மாநிலம் ஸ்ரீசிட்டிக்கு கொண்டு சென்றுவிட்டது. ஹீரோ பைக் நிறுவனம் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்றுவிட்டது."
"மெட்ரோ ரயில்பெட்டி தயாரிக்கும் ஆல்ஸ்தம் நிறுவனம் ஆந்திராவில் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இப்போது கியா நிறுவனமும் ஆந்திர மாநிலத்துக்கு சென்றுவிட்டது." இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்."