குண்டர் சட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

First Published Dec 7, 2016, 11:15 AM IST
Highlights


திண்டுக்கல்,

இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி உள்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் மணிமாறன் (38). ஆட்டோ டிரைவரான இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்தார்.

இவருக்கும், இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவர் தர்மாவுக்கும் (38) இடையே முன்விரோதம் இருந்தது. இதன் எதிரொலியாக மணிமாறன் அவருடைய மனைவி மற்றும் மகன் கண்முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் தெற்கு காவலாளர்கள், தலைமறைவான தர்மா, அவருடைய தம்பி தீனதயாளன் (35), கூட்டாளிகளான பாரதிபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராகவன் (29), முனிசிபல் காலனியை சேர்ந்த முருகன் மகன் ஞானஜோதி (28) உள்பட 6 பேரை கைது செய்தனர். இவர்கள், விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தர்மா, ராகவன், ஞானஜோதி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்க்கு, காவல் சூப்பிரண்டு சரவணன் மூலம் இன்ஸ்பெக்டர் கதிரவன் பரிந்துரை செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் நகல், விருதுநகர் மாவட்ட சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தர்மா, ராகவன் உள்ளிட்ட 3 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

click me!