
விழுப்புரத்தில் மணல் திருட்டைத் தடுக்க கோரி ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது. மற்றொரு இடத்தில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் குவாரியை மூடக் கோரி முற்றுகையிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டியச் சேர்ந்த ராம்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “விக்கிரவாண்டி வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக லாரிகள் மூலம் மண் திருட்டில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத் திருட்டுக்கு சாதகமாக தெரு விளக்குகள் உடைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விக்கிரவாண்டி வட்டாட்சியருக்கு பலமுறை புகார் அளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ஏரி மண் திருட்டை தடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்
இதேபோன்று, திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சீலோவாம் பகுதியையொட்டி, தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் குடிநீர் பிரச்சனை நிலவுவதுடன் விவசாயமும் பெரிதும் பாதிப்பதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து இந்த மணல் குவாரியை மூடக்கோரி, தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் பா.கீதா, ஆய்வாளர் கொடிராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் மூர்த்தி, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமநாதன் உள்ளிட்டோர் விரைந்து வந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர்.
பின்னர் திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இவர்களை, 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி பத்மாவதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.